2020 மார்ச் 08ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கோறளைப்பற்று பிரதேச சபை பேத்தாழை பொது நூலகத்தில் “பெருமைமிகு பெண்களுக்கு எதிரான சிறுமைகளை ஒழிப்போம்” என்கின்ற மகுடத்தின் கீழ் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
சணச அபிவிருத்தி வங்கி வாழைச்சேனைக் கிளையின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், சணச அபிவிருத்தி வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பேத்தாழை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்டத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.
ஒரு சமூக உருவாக்கத்தில் பெண்களின் வகிபங்கே மிக முக்கியமானது என்கின்ற அடிப்படையில், குழந்தைகளை நற்பிரஜைகளாக உருவாக்குவதில் பெண்களே பெரும்பங்கு வகிப்பதனால், பெண்குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் இந்த சமூகத்திற்கு கௌரவம் சேர்ப்பவர்களாக உருவாக்குவதற்கு சிறுவயது முதலே வாசிப்பு பழக்கமும், புத்தகங்களுடனான தொடர்பும் மிகவும் இன்றியமையாதது அதனை பெண்களே முன்னெடுத்து வருகின்றனர். இதனை இன்னும் காத்திரமானதாக மாற்ற “வாசிக்கும் மகளிரால் உருவாக்கப்படுகின்ற சமூகமானது எத்தகைய காத்திரமானதாக உள்ளது என்பது குறித்தும், பெண்களின் தலைமைத்துவமும் பெண்களின் சமூகப் பணியும் இன்று வீட்டை மட்டுமல்லாது முழு உலகினையும் வழிநடத்துவதில் முன்னிற்பது குறித்தும், பெண்களுக்கு எதிரான தடைகளும் அவற்றை பெண்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ள வரலாறுகள் பற்றியும் விழாவில் கலந்து கொண்ட அதிதிகளால் பதிவு செய்யப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்களுக்கு சணச அபிவிருத்தி வங்கியினரால் மகளிர் தின நினைவாக சிறப்பு பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.